ஆஸ்திரேலிய அணியின் 19 ஆண்டுகால சாதனையை சமன்செய்துள்ளது இந்திய அணி..
இந்தியாவுக்கு வந்துள்ள தென்னாபிரிக்கா அணி டி20 தொடர் மற்றும் ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை இந்திய அணி 2:1 என்ற கணக்கில் வென்று அசத்தியது. இதையடுத்து நடைபெற்ற ஒரு நாள் தொடரில் தென்னாப்பிரிக்கா ஒரு வெற்றியும், இந்தியா ஒரு வெற்றியும் பெற்ற நிலையில், இரு அணிகளுமே ஒன்றுக்கொன்று என சமநிலையில் வகித்தது..
இந்த நிலையில் நேற்று டெல்லியில் அருண் ஜெட்லி மைதானத்தில் கடைசி ஒரு நாள் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 27.1 ஓவரில் 99 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து களம் இறங்கிய இந்திய அணி 19.1 ஓவரில் 3 விக்கெட் இழந்து 105 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி கோப்பையை வென்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது. அதாவது இந்த வெற்றி இந்த ஆண்டில் இந்தியாவுக்கு 38 வது வெற்றி ஆகும்..
இந்த வருடத்தில் டெஸ்ட் போட்டி, ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இந்திய அணி இந்த வெற்றியுடன் சேர்த்து மொத்தம் 38 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. இதன் மூலம் 19 ஆண்டு காலமாக ஆஸ்திரேலியா அணி பதிவு செய்து வைத்திருந்த சாதனையை இந்தியா சமன் செய்துள்ளது. 2003ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்றிருந்த ஆஸ்திரேலியா அணி அந்த ஆண்டில் மொத்தம் 38 வெற்றிகளைப் பெற்று இருந்தது.
ஒரு ஆண்டில் சர்வதேச அணி பெற்ற அதிக வெற்றி இதுவாக இருந்தது. இதுவரை அந்த சாதனையை எந்த ஒரு அணியாலும் தகர்க்க முடியவில்லை. இந்நிலையில் தற்போது இந்திய அணி அதனை சமன் செய்துள்ளது. இதனை தொடர்ந்து டி20 உலக கோப்பை தொடர் வர இருப்பதால் ஆஸ்திரேலியா அணியின் சாதனை முறியடிப்பதற்கு இன்னும் ஒரு வெற்றி தான் இந்திய அணிக்கு தேவைப்படுகிறது. இதனால் விரைவில் அந்த சாதனையை இந்திய அணி நிகழ்த்தும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்..
𝐂.𝐇.𝐀.𝐌.𝐏.𝐈.𝐎.𝐍.𝐒! 🏆#TeamIndia | #INDvSA pic.twitter.com/rHqevCsVxz
— BCCI (@BCCI) October 11, 2022