தூத்துக்குடி மாநகரில் நடைபெற்ற தொடர் கொலைகள் சம்பவங்களின் எதிரொலியாக, 7 ஆய்வாளர்கள் உள்பட 40 காவலர்கள் அதிரடியாக மாற்றபட்டுள்ளனர்.
முத்துநகர் , தொழில் நகரம் என்று புகழப்படும் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 மாதத்தில் மட்டும் சுமார் 19 பேர் படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் சட்ட ஒழுங்கு குறைபாடு என்ற பல குற்றச்சாட்டுக்கு எழுந்தன. இந்நிலையில் நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநபு பல்வேறு காவல் அதிகாரிகளை மாற்றி உத்தரவு பிறப்பித்தார்.
தூத்துக்குடியில் நடைபெற்ற இந்த குற்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், சிறப்பு உதவி ஆய்வாளர் உள்பட 5 போலீசாரை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டிருந்தார்.இந்நிலையில் இன்று 2-வது கட்ட நடவடிக்கையாக தற்போது, 7 ஆய்வாளர்கள் உள்பட 40 காவலர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.