வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், இலங்கையையொட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்தமிழகத்தில் சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார். அடுத்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், மதுரை, விருதுநகர்,திருநெல்வேலி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் பிற கடலோரோ மாவட்டங்கள்,உள் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் லேசான மழையும் சில பகுதிகளில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவித்தார்.
ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தூத்துக்குடி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், கன மழைபொழியும். சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
வருகின்ற 10ஆம் தேதி முதல் 13 தேதி வரை தென் மேற்கு வங்க கடல், குமரிக்கடல், தென்கிழக்கு அரபிக்கடல், கேரளா கடலோரம் மற்றும் லட்சத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி வீசஇருப்பதால் மீனவர்கள் இப்பகுதிக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.