கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு தள்ளி வைக்கப்பட்ட எஞ்சிய ஒரு தேர்வும் கட்டாயம் நடத்தப்படும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு இந்தியாவில் தீவிரமடைய தொடங்கியதை அடுத்து கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு இந்தியாவில் அமல்படுத்தப்பட்டு, மே 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மார்ச் மாதத்தில் நடைபெற இருந்த பதினொன்றாம் வகுப்புக்கான எஞ்சிய ஒரு தேர்வானது கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு அனைத்தும் முடிவடைய, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே தேர்வு நடத்த வேண்டியது பாக்கியுள்ளது. இதன் காரணமாக ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்வு இல்லாமல் தேர்ச்சி பெற்றது போல், பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு எஞ்சிய ஒரு தேர்வும் ரத்து செய்யப்பட உள்ளதாக,
தொடர்ந்து பல வதந்திகள் பரவி வந்தன. இதுகுறித்து கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். அதில், கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு பதினொன்றாம் வகுப்புக்கான கடைசி தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. எஞ்சிய ஒரு தேர்வு கண்டிப்பாக நடைபெறும். அது ரத்து செய்யப் படுவதற்கான வாய்ப்பு இல்லை. தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.