கடலூர் அருகே தேசியக் கொடியை அவமதித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பார்த்த கட்சியை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியை அடுத்த புவனகிரி என்னும் பகுதியில் பெரியார் சிலை அருகே திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, பாஜக என அனைத்து கட்சிகளின் கொடிக் கம்பங்கள் உள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் சுதந்திர தினத்தை முன்னிட்டு பாஜகவினர் அப்பகுதியில் கூடி பாஜக கட்சி கொடிக் கம்பத்தில் இருந்த கொடியை இறக்கி, தேசியக் கொடியை கட்டி அதில் ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடினர்.
இது குறித்து அறிந்த மற்ற கட்சியினர், கட்சி கொடி கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றலாமா? தேசியத்தின் மீது குறிப்பிட்ட கட்சி,மத சாயம் பூச நினைக்கிறீர்களா? என கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் இது தேசிய கொடியை அவமதிக்கும் செயலாகும் என்பதால், காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள்,
இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். பின் பாஜகவினரை அழைத்து தேசிய கொடியை கட்சி கொடி கம்பத்தில் இருந்து அகற்றுமாறு வலியுறுத்தினர். இதற்கு மறுப்பு தெரிவித்த பாஜகவினர் மாலை 6 மணிக்கு மேல் கழற்றி தருகிறோம் என கூறியுள்ளனர். அதன்பின் காவல்துறையினரே பாஜக கொடிக் கம்பத்தில் இருந்த தேசியக் கொடியை அகற்றி வருவாய் துறை அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டனர். அதேபோல் புகாரின் பேரில் பாஜக கட்சியை சேர்ந்த 10 பேரையும் கைது செய்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.