பொங்கல் பரிசு தொகுப்பு வரும் 25ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்து இருக்கிறது
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான வியூகங்களை வகுத்து வருகின்றன. ஏறக்குறைய கூட்டணியை உறுதி செய்யும் தருவாயில் அரசியல் கட்சிகள் கவனம் செலுத்துகின்றனர். 10 வருடம் ஆட்சியில் இல்லாத திமுக எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றும், அடுத்தடுத்து இரண்டு முறை ஆட்சியில் இருந்த அதிமுக மூன்றாவது முறை ஆட்சி கட்டலை அலங்கரிக்க வேண்டும் என்றும் போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றன. இதற்காக ஆளும் கட்சி பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது. தேர்தல் நேரத்தில் அரசு அறிவிக்கும் திட்டங்கள் தேர்தலுக்கானது என திமுக சார்பாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.
பொங்கலுக்கு கூட அரசு தரப்பில் குடும்ப அட்டைகளுக்கு 2500 ரூபாய் வழங்கப்படம் என அரசு அறிவித்தது. இதற்கு எதிராக திமுக நீதிமன்றத்தை நாடியது. அரசியல் கட்சித் தலைவர்களின் படங்களை ரேஷன் கடைகளுக்கு முன்பு வைத்து பணம் விநியோகம் செய்கிறார்கள் என்றெல்லாம் குற்றச்சாட்டு எழுந்திருந்த நிலையில் நீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்த நிலையில் திமுகவின் வழக்கால் ஆளும் அரசுக்கு நீதிமன்றத்தின் கட்டுப்பாடு ஒரு பின்னடைவாக இருந்தது. இதனை தனக்கு சாதகமாக மாற்ற வேண்டும் என்பதற்காக தமிழக அரசு பொங்கல் பரிசு வாங்க கடைசி நாளாக இருந்த 13ஆம் தேதியை 25 தேதி வரை உயர்த்தியுள்ளது.
குறிப்பாக பொங்கல் முடிந்த பின்பும் ஏறக்குறைய ஏழு நாட்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதுகுறித்த அறிவிப்பை நேற்று தமிழக அரசு வெளியிட்டது. அதில் ஒருவர் கூட விடுபடக் கூடாது அனைவரும் வாங்கிக் கொள்ளும் வகையில் தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் தமிழக அரசின் இந்த நடவடிக்கையை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதே நேரத்தில் தேர்தல் வரவிருக்கும் நிலையில் பொங்கல் முடிந்த பிறகும் பொங்கல் பரிசு பண விநியோகத்தை தேர்தல் பிரச்சார உத்தியாக பயன்படுத்திக்கொள்ள ஆளும் அரசுக்கு இது கைகொடுக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். தமிழகத்தைப் பொருத்தவரை 2 கோடி ரேஷன் அட்டைகள் இருக்கின்றன. இதற்காக கிட்டத்தட்ட தமிழக அரசிற்கு 5,000 கோடி ரூபாய் அளவிற்கு நிதியை ஒதுக்கி இந்த திட்டத்தை செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.