2ஜி வழக்கு வருகின்ற அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் தினமும் விசாரணை செய்யப்படும் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த ஐ.மு கூட்டணி ஆட்சியில் தனியார் தொலைத்தொடர்பு சேவை வழங்க கூடிய நிறுவனங்களுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான உரிமம் வழங்கும் போது பல்வேறு முறைகேடு நடந்ததாகவும், அதனால் அரசாங்கத்திற்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகவும்,சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.அந்த வழக்கில் அப்போது இருந்த மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சரும், திமுகவை சேர்ந்தவருமான ராஜா மற்றும் அந்த கட்சியின் எம்பி கனிமொழி ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
அந்த வழக்கினை விசாரணை செய்த டெல்லி சிறப்பு நீதிமன்றம், குற்றங்களை நிரூபிக்க போதிய ஆதாரம் எதுவும் இல்லை என்று கூறி 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அனைவரையும் விடுதலை செய்தது.அதற்கு எதிராக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை சார்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் 2ஜி வழக்கை விரைவில் விசாரணை செய்ய வேண்டும் என சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்த மனுக்கள் மீது டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று விசாரணை நடத்தியது. அந்த விசாரணையில் வருகின்ற அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் தினமும் 2ஜி வழக்கு விசாரணை செய்யப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.