ஈரோடு மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த 8 வயது சிறுமியை டாக்சி டிரைவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கால் டாக்சி டிரைவர் தீனதயாளன் வசித்து வந்துள்ளார். அவருக்கு ஏற்கனவே திருமணமான ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண் தனது கணவரை இழந்து எட்டு வயது பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்தப் பெண்ணுக்கு தீனதயாளனுடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. அதன்பிறகு அவரை அந்தப் பெண் திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு தனது மகளை ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் சேர்த்து அந்த பெண் படிக்க வைத்துள்ளார்.
இதனையடுத்து கொரோனா ஊரடங்கு காரணத்தால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளன. அதனால் அந்த சிறுமி தனது அம்மாவுடன் வசித்து வந்துள்ளார். அந்தப் பெண் வழக்கமாக வேலைக்கு செல்வது போன்று சம்பவத்தன்று வேலைக்கு சென்றுள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக டாக்ஸி டிரைவர் தீனதயாளன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். அப்போது தனது கணவர் தன் பெண்ணுக்கு பாதுகாப்பாக இருப்பார் என்று நம்பி அந்த பெண் வேலைக்கு சென்றுள்ளார்.
கடந்த இரண்டு நாட்களாக சிறுமி பலத்த வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். அதனைக் கண்ட அவரின் தாய் உடனடியாக அந்த பெண்ணை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றார். அந்த சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்தனர். அதனைக் கண்டு அந்த சிறுமியின் தாய் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக மருத்துவர்கள் ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நன்னடத்தை அதிகாரி தேன்மொழிக்கு தகவல் அளித்தனர்.
இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தேன்மொழி தலைமையிலான அதிகாரிகள் குழந்தையிடம் ரகசிய விசாரணையில் ஈடுபட்டனர். அந்த விசாரணையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்த தீனதயாளன், தனது குழந்தை ஸ்தானத்தில் இருக்கும் குழந்தையை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து டாக்சி டிரைவரை போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர்.