மாநிலங்களவை செயலகத்தில் மீண்டும் பயோமெட்ரிக் முறை வருகைப்பதிவு செயல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் பணிபுரிந்து வரும் 1300 ஊழியர்களின் வருகை பதிவு பயோமெட்ரிக் முறையாக கடந்த 2018 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் மாற்றப்பட்டது. இதற்கிடையே கொரோனா தொற்று காரணமாக கடந்த 2020 ஆம் வருடம் மார்ச் மாதம் பாதுகாப்பு காரணங்களுக்காக பயோமெட்ரிக் முறை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நாட்டில் கொரோனா தற்போது குறைந்து வந்ததை தொடர்ந்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் மீண்டும் பயோமெட்ரிக் முறை அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதுபற்றி மாநிலங்களவை செயலாளர் செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது, கொரோனா காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் பயோ மெட்ரிக் முறை மீண்டும் செயல்படுத்தப்படுகிறது.
மேலும் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் பயோமெட்ரிக் மூலமாக வருகையை பதிவு செய்ய வேண்டும். தற்போது தொழில் நுட்பப் பிரச்சினைகள் போன்றவை ஆராய, சோதனை முறையில் வருகின்ற 31 ம் தேதி வரை பயோமெட்ரிக் வருகைப்பதிவு செயல்படுத்தப்பட இருக்கிறது என அதில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்களில் பயோமெட்ரிக் முறை விரைவில் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.