இரண்டு வருடங்களுக்கு முன் காணாமல் போன பெண் நடுக்கடலில் உயிருடன் மிதந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
கொலம்பியா கடற்பகுதியில் கடந்த 26ஆம் தேதி மீனவர்கள் பெண்ணொருவரை மீட்டுள்ளனர். 46 வயதான ஏஞ்சலிகா என்ற அந்தப் பெண் இரண்டு வருடங்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளார். கடுமையான குளிரில் ஆபத்தான நிலையில் தான் அந்தப் பெண்ணை மீனவர்கள் மீட்டுள்ளனர். அவருக்கு முதலுதவி கொடுத்த உதவிக்குழுவினர் அந்தப்பெண் பேசக்கூட முடியாத படி பலவீனமாக இருந்ததாகத் தெரிவித்துள்ளனர். மீனவர்களான குஸ்டாவோ, விஸ்பால் ஆகிய இருவரும் நடுக்கடலில் இந்தப் பெண்ணை பார்த்துள்ளனர்.
இவர் மிதப்பதை பார்த்து சடலம் என்றுதான் முதலில் நினைத்துள்ளனர். ஆனால் அவரை மீட்டு முதலுதவி அளித்த பிறகு தான் அவருக்கு உயிர் இருப்பதை தெரிந்து கொண்டனர். விஸ்பால் முதலில் ஸ்பானிய மொழியில் பேசியுள்ளார் அதன் பிறகு ஆங்கிலத்தில் பேசினார். அவர் பேசுவதை புரிந்து கொண்ட அந்தப் பெண்ணால் பதிலளிக்க முடியவில்லை. அந்தப் பெண்ணிற்கு மீனவர்கள் தண்ணீர் கொடுக்க அதனை குடித்த அவரால் தனது கண்ணீரை அடக்க முடியவில்லை.
சுமார் 8 மணி நேரம் அந்தப் பெண் கடலில் மிதந்து இருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. இதனிடையே அவர் காணாமல் போனதாக புகார் கொடுத்த உறவினர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு வருடங்களாக தனது தாய் பற்றி எந்த தகவலும் இல்லை என்றும் அவருக்கு என்ன நேர்ந்தது என்பது தெரியவில்லை என்றும் ஏஞ்சலிகாவின் மகள் கூறியுள்ளார். இரண்டு வருடங்களுக்கு முன்பு ஏஞ்சலிகா காணாமல் போன பிறகு என்ன நடந்தது என்பது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.