கடன் வழங்க கோரி மகளிர் குழுவினர் வங்கியின் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கதிர்குளம் கிராமத்தில் கடந்த 7 ஆண்டுகளாக மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகின்றது. இந்த சங்கத்தை சேர்ந்த 44 மகளிர் குழு உறுப்பினர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குடியாத்தத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளை மூலம் கறவை மாடுகள் வாங்க மானியத்துடன் 2 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் கடனை பெறுவதற்கு வங்கி அதிகாரிகளிடம் அணுகியுள்ளனர். அப்போது வங்கி அதிகாரிகள் கறவை மாடுகள் வாங்க கடன் வழங்குவதற்கு ஒவ்வொருவரும் வங்கியில் கணக்கு தொடங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். அதன்பின் ஒவ்வொரு கணக்கிற்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் வைப்புத் தொகையாக கட்டுமாறு மகளிர் குழு உறுப்பினர்களிடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி மகளிர் குழு உறுப்பினர்கள் 10 ஆயிரம் ரூபாயை வங்கி கணக்கில் செலுத்தியும் 2 ஆண்டுகள் ஆகியும் கடன் உதவி தரவில்லை என்று கூறப்படுகின்றது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை கேட்டும் அவர்கள் பல்வேறு காரணங்களை கூறி நாட்கள் கடத்தி வந்ததாக கூறப்படுகின்றது. இதனைதொடர்ந்து கடன் கொடுக்காமல் வருடம் கடத்தி வந்த வங்கி நிர்வாகத்தை கண்டித்து 50-க்கும் மேற்பட்ட கதிர்குளம் மகளிர் பால் உற்பத்தியாளர்கள், கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த பெண்கள் வங்கியின் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக தகவலறிந்த டவுன் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அதன்பின் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் உறுதியளித்த பின் பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.