காலநிலை மாற்றத்தின் காரணமாக உலகின் சுற்றுச்சுழல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிமிடத்திற்கும் உலகின் ஏதோ ஒரு பகுதி நில வளத்தை இழந்தும், மரங்களை இழந்தும் பாலைவனமாகிக் கொண்டிருக்கிறது எனவும், பனிப்பாறைகள் உருகி, உலகில் உள்ள பெரும்பாலான நகரங்கள் நீரில் முழ்கும் எனவும் ஐ.நா., முன்பே எச்சரித்துள்ளது.
இந்நிலையில் அதிகரிக்கும் புவி வெப்பமயமாதலால் அண்டார்டிகா கண்டமானது, தனது வரலாற்றில் இதுவரை காணாத அளவிற்கு உச்சகட்ட வெப்பநிலையை பதிவு செய்துள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கு முன்னதாக சுமார் 1,29,000 ஆண்டுகளுக்கு முன்னர், மேற்கு அண்டார்டிகா பகுதியிலுள்ள பனிக்கட்டிகள் இதுபோன்ற வெப்ப நிலை மாற்றம் காரணமாக உருகி, உலகிலுள்ள கடல் மட்டத்தை உயர்த்தியிருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
அதுபோன்றே தற்போது பனிப்பாறைகள் உருகி வருவதன் காரணமாக, இன்னும் 1000 ஆண்டுகளில் உலகின் கடல்மட்டமானது 2 முதல் 6 மீட்டர் வரை உயரக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் எச்சரித்துள்ளனர்.
மேலும், 1979இல் இருந்து 2017ஆம் ஆண்டு வரை அண்டார்டிகா பனிப் படுகையில், பனி உருகுவது தோராயமாக ஆறு மடங்கு அதிகரித்துள்ளது எனவும், இந்த அளவு பனி உருகுகிறது என்றால் கடல்மட்டத்தின் உயரமும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டுதான் இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், அண்டார்டிகா கண்டத்தின் அதிகபட்ச வெப்ப அளவாக 18.3 செல்சியஸ் இருக்கிறது. ஆனால், அது தற்போது மேலும் இரண்டு டிகிரிகள் அதிகரித்து, தற்போது 21 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளதாகவும், இந்த வெப்பநிலையானது கோடைக்காலங்களில் கூட பதிவானது கிடையாது எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நவீன உலகில் பல மாற்றங்களை, நாம் கொண்டுவந்தாலும், அது இயற்கையோடு ஒன்றிணையாவிடில், இயற்கையில் பிடியிலிருந்து தப்ப இயலாது என்பதனை, அண்டார்டிகா பனிப்பாறைகள் தினந்தினம் நமக்கு உணர்த்திவருகிறது. இயற்கையைப் பாதுகாப்போம், உலக வெப்பமயமாதலைத் தடுப்போம்..