Categories
தேசிய செய்திகள்

2 தவணை தடுப்பூசி போட்டவர்களுக்கு…. பூஸ்டர் டோஸ் தேவையா?…. நிபுணர்கள் முக்கிய தகவல்…..!!!!!!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கீழ் செயல்படும் தேசியநோய் நுண்ணுயிரியல் நிறுவன விஞ்ஞானிகள் பிரக்யா டி. யாதவ், கஜனன் என்.சப்கல், ரீமா ஆர். சகாய் மற்றும் சில மருத்துவர்கள் உருமாறிய ஒமிக்ரான் பிஏ-1 வைரசுக்கு எதிராக கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள் எந்த அளவுக்கு செயல்படுகிறது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதன் முடிவில் ஒமிக்ரான் பிஏ-1 வகை வைரசுக்கு எதிராக கோவிஷீல்டு தடுப்பூசி மிககுறைந்த அளவிலான நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பது தெரியவந்தது. அதேபோன்று கோவேக்சின் தடுப்பூசியும் ஒமிக்ரானுக்கு எதிராக குறைந்த பாதுகாப்பையே அளிப்பது தெரியவந்தது.

இந்த ஆய்வு முடிவுகள் பற்றி ஐ.சி.எம்.ஆர். நிபுணர்கள் கூறியிருப்பதாவது “ஒமிக்ரான் உருமாறிய வைரஸ், அதன் முள் பகுதியில் மிக அதிகமாக உருமாற்றங்களுக்கு உள்ளாகி பாதிப்பை ஏற்படுத்துகிறது. டெல்டா உட்பட பிற கொரோனா வகைகளால் பாதிக்கப்பட்டு மீண்ட நோயாளிகளின் உடல்களில் ஏற்பட்டிருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியிலிருந்து ஒமிக்ரான் எளிதாக தப்பித்து தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த ஆய்வுக்காக கொரோனா தொற்றால் பாதிக்கப்படாத 2 தவணை கோவிஷீல்டு தடுப்பூசி போட்டு 180 நாட்களை நிறைவு செய்த 24 பேரின் ரத்த மாதிரிகளும், பாதிப்பிலிருந்து மீண்டு பின் 2 தவணை கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்ட 17 பேரின் ரத்தமாதிரிகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் கோவிஷீல்டு தடுப்பூசி 2 தவணை போட்ட பின் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்ட 46 நபர்களின் ரத்தமாதிரிகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதில் இந்த 3 பிரிவினருக்கும் டெல்டா, பீட்டா, பி.1 வகை கொரோனா வைரஸ்களுக்கு எதிரான நோய்எதிர்ப்பு திறன் அதிகமாக உள்ளதும், அதே சமயத்தில் உருமாறிய ஒமிக்ரானுக்கு எதிராக நோய் எதிர்ப்பு திறன் குறைவாக உள்ளதும் தெரியவந்தது. கொரோனா தொற்றால் பாதிக்கப்படாத 2 தவணை கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் ரத்தத்தில் ஒமிக்ரானுக்கு எதிராக நடுநிலைப்படுத்தும் ஆன்டிபாடிகளின் சராசரி செறிவு 0.11 எனும் அளவில் மிக குறைவாக இருப்பதும் கண்டறியப்பட்டது.

இந்த செறிவு கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு பின் 2 தவணை கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு ஆன்டிபாடிகளின் செறிவு 11.28 என்ற அளவிலும், கோவிஷீல்டு தடுப்பூசி 2 தவணை செலுத்திய பின் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களுக்கு ஆன்டிபாடிகளின் சராசரி செறிவு 26.25 என்ற அளவில் கூடுதலாக உள்ளதும் தெரியவந்தது. பிஏ-1 ஒமிக்ரான் பொதுமக்களின் உடலில் உருவாக்கி இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியிலிருந்து எளிதில் தப்பித்து பாதிப்பை ஏற்படுத்துவது போன்று பிஏ-2 வகை மற்றும் தற்போதைய துணை உருமாறிய வைரஸ்களும் அந்த திறனை பெற்றிருக்க வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. ஆகவே கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் கொரோனா தடுப்பூசி 2 தவணை போட்டுக்கொண்டவர்களில் தகுதியுள்ளவர்கள் விரைவில் பூஸ்டர் தவணை தடுப்பூசியை செலுத்திக்கொள்வது மிகவும் அவசியம்” என அவர்கள் கூறியுள்ளனர்.

Categories

Tech |