கண்மாயில் மூழ்கிய கூலித்தொழிலாளியை 2-வது நாளாக தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம் போடி அடுத்துள்ள சில்லமரத்துப்பட்டி அழகர்சாமி தெருவில் சதீஷ்குமார் (வயது 30) என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் ஆத்திரமடைந்த மனைவி கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மனைவி சென்றுவிட்டதை நினைத்து மனமுடைந்த சதீஷ்குமார் சம்பவத்தன்று சுந்தரராஜபுரம் அருகே உள்ள மீனாட்சியம்மன் பெரிய கண்மாயில் வைத்து நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது சதீஷ்குமார் திடீரென கண்மாயில் இறங்கியுள்ளார். இதனை பார்த்த அவரது நண்பர்கள் எவ்வளவு அழைத்தும் சதீஷ்குமார் கேட்கவில்லை. மேலும் சதீஷ்குமார் திடீரென தண்ணீரில் மூழ்கி உள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் உடனடியாக போடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சதீஷ்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது 2-வது நாளாக சதீஷ்குமாரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுகுறித்து போலீசும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.