வேலூர் விடுதியில் வால்பாறை நகராட்சி தூய்மை ஆய்வாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் போடிநாயக்கன்பட்டி கிராமத்தில் ஜான்சன் என்பவர் வசித்து வந்தார். இவர் கோவை மாவட்டத்தில் வால்பாறை நகராட்சியில் தூய்மை ஆய்வாளராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் ஜான்சன் கல்லீரல் பாதிப்பால் சிரமப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக வேலூருக்கு சென்றுள்ளார். அங்கு ஆற்காடு சாலையில் இருக்கும் விடுதியில் சிகிச்சைக்காக தங்கியுள்ளார். இதனையடுத்து அங்கு இருக்கக்கூடிய தனியார் மருத்துவமனையில் ஜான்சன் சிகிச்சை பெற்றுகொண்டு விடுதிக்கு சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து விடுதி அறைக்குள் சென்ற ஜான்சன் இரண்டு நாட்களாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் வேலூர் வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த தகவலின்படி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சம்பத் மற்றும் தலைமைக் காவலர் விஜயகுமார் போன்றோர் விடுதிக்கு சென்றனர். இதனையடுத்து காவல்துறையினர் விடுதி அறையின் கதவைத் தட்டி ஜான்சனை அழைத்தபோது எந்தவிதமான பதிலும் வரவில்லை. இதனால் மாற்றுச்சாவியின் மூலமாக அறையின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ஜான்சன் வாயில் நுரை தள்ளியபடி சடலமாக கிடந்ததை பார்த்து காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து காவல்துறையினர் அந்த அறையை சோதனையிட்டதில் ஸ்கேன் ரிப்போர்ட் மற்றும் கடிதம் ஒன்று கிடைத்தது.
அந்த கடிதத்தில் எனக்கு கல்லீரல் பாதிப்பு இருந்ததால் நான் உயிர்வாழ விரும்பவில்லை என்றும் அதனால் என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை நானே விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்கிறேன் என்று எழுதிவைத்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் ஜான்சன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன்பின்னர் ஜான்சன் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தை பற்றி போடிநாயக்கனூர்பட்டியில் இருக்கும் அவருடைய குடும்பத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.