இரண்டு காதலர்கள் தனித்தனியாக தங்களின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் பத்தனம் திட்டா பகுதியில் உள்ள இளமனூர் என்ற பகுதியில் வசித்து வரும் வர்கீஸ் என்பவரின் மகன் ஜெபின் ஜோன் இவரும், முதுவேல் பகுதியை சேர்ந்த ஜோன் மாத்யூ என்பவரின் மகளான சோனா ஷெரீன் என்பவரும் பத்மநாபபுரம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் சேர்ந்து படித்து வந்துள்ளனர். பின்னர் காலப்போக்கில் இவர்களுக்கு இடையே இருந்த நட்பானது காதலாக மாறியுள்ளது. இவர்கள் காதலுக்கு இரு வீட்டிலும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் நேற்று காலை ஏழு முப்பது மணி அளவில் ஜெபின் ஜோன் தனது வீட்டின் படுக்கையறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரின் பெற்றோர்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் வெளியில் தெரிய வந்தது.
இதையடுத்து சிறிது நேரம் கழித்து தனது வீட்டின் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் சோனா ஷெரீன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருவரின் உடலையும் மீட்டு அரசு மருத்துவமனையில், பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இருவரும் அடுத்தடுத்து எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பதற்கான காரணம் தற்போது வரை தெரியவில்லை. இருப்பினும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஜெபின் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த பிறகே சோனா தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.