பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்வது ஒவ்வொரு பெற்றோரின் கடமை மட்டும் இல்லை. இந்த சமுதாயத்தில் பொறுப்பும் கூட. அவ்வகையில் குடும்ப கட்டுப்பாட்டு முறையை ஊக்குவிப்பது, பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, கல்வி,திருமண உதவித்தொகை போன்றவற்றை மையமாகக் கொண்டு தமிழக முதல்வர் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் முதல்வரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால் 50 ஆயிரமும், இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் 25 ஆயிரமும், 18 வயது முடிவடைந்த பிறகு முதிர்வு தொகை மற்றும் வட்டியுடன் சேர்த்து பயனாளிகளுக்கு வழங்கப்படும்.
டெபாசிட் காலத்தில் இருந்து 5 வயது வரை மாதம் ஒன்றுக்கு 150 ரூபாய் என்ற அளவில் கிடைக்கும். 18 வயது வரை இந்த உதவி வந்து கொண்டிருக்கும். பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவும் வகையில் இந்த உதவி வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக குடும்பத்தின் ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக இருக்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் முக்கிய நிபந்தனை. குடும்பத்தில் ஆண் குழந்தைகள் இருக்கக் கூடாது.
இந்தத் திட்டத்தில் விண்ணப்பித்த பிறகு ஆண் குழந்தைகளை தத்து எடுக்கவும் கூடாது. பெண் குழந்தைக்கு மூன்று வயது முடிவதற்குள் விண்ணப்பிக்க வேண்டும். 40 வயதுக்குள் குழந்தைகளின் தாயார் குடும்பநல அறுவை சிகிச்சை செய்து இருக்க வேண்டும். 72 ஆயிரத்திற்குள் வருமானம் இருப்பதற்கான சான்று மற்றும் ஆண் வாரிசு இல்லை என்பதற்கான சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும். இரண்டாவது பெண் குழந்தை பிறந்து மூன்று வருடத்திற்குள் இருந்தால் தாராளமாக இந்த திட்டத்தில் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் உள்ள சமூக நலப் பிரிவு அலுவலர், மகளிர் நல அலுவலர்களிடம் அசல் வைப்புநிதிப் பத்திரம், பயனாளியின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான மதிப்பெண் பட்டியல், பயனாளியின் பெயரில் தனி வங்கிக் கணக்குப் புத்தக நகல் ஆகிய சான்றுகளுடன் சமர்ப்பித்துப் பயன்பெறலாம்.