தமிழகத்தில் நேற்று விநாயகர் சதுர்த்தியை இந்துக்கள் தங்களுடைய வீடுகளில் கொண்டாடி மகிழ்ந்தனர். கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக பொது இடங்களில் மக்கள் கூடி விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட தமிழக அரசு தடை விதித்திருந்த நிலையில், பாஜக சார்பாக ஒரு லட்சம் விநாயகர் சிலைகளை வீடுகளில் வைத்து மூன்று நாட்களுக்கு வழிபடுவதாகவும், அது தங்களுடைய தனிப்பட்ட உரிமை என்பதால் அதில் அரசு தலையிட முடியாது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் முன்பு ஐந்தடி உயரமுள்ள விநாயகர் சிலையினை இந்து அமைப்பினர் நேற்று இறக்கி வைத்திருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு வைத்திருந்த சிலையை பறிமுதல் செய்து வாகனத்தில் ஏற்றியபோது போலீசாருக்கும், இந்து முன்னணி அமைப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் விநாயகர் சிலை சேதமடைந்தது. இதற்கு எச்.ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கூறிய அவர், விநாயகர் சிலைகளை வீதிகளில் உடைத்த இந்து விரோதி ஈ.வெ.ராவுக்கும், கருரூரில் தடி கொண்டு விநாயகர் சிலைகளை உடைத்த காவல்துறை அதிகாரிகளுக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை. தமிழக டிஜிபி இந்த அதிகாரிகளை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.