தொழிலாளியின் மனைவி தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் அருகே காட்டூர் பகுதியில் கூலித் தொழிலாளியான சதாசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி செல்வி என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் சதாசிவம் 2-வதாக மீனா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு தாத்தியம்பட்டியில் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து மீனாவை சதாசிவம் காட்டூருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக அழைத்து சென்றுள்ளார். இதன் காரணமாக செல்விக்கும், மீனாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இவர்கள் 2 பேருக்கும் இடையே நேற்று முன்தினம் கடுமையான பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த செல்வி மீனாவை கடப்பாரையால் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த மீனாவை அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு மீனாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து செல்வியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.