யுஸ்வேந்திர சாஹலை விளையாட வைக்காதது மிகப்பெரிய தவறு என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் விளாசியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று முன்தினம் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு தகுதியானது. இந்நிலையில் நேற்று அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதியது.. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பந்து வீச முடிவு செய்தார்.
அதன்படி களமிறங்கி இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பாண்டியா 33 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்ஸர் உட்பட 63 ரன்களும், விராட் கோலி 40 பந்துகளில் 50 ரன்களும் அடித்து அவுட் ஆகினர். அதன் பின் களமிறங்கிய இங்கிலாந்து அணி அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் அதிரடியால் விக்கெட் இழப்பின்றி 16 ஓவரில் 170 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
அலெக்ஸ் ஹேல்ஸ் 47 பந்துகளில் (4பவுண்டரி, 7 சிக்ஸர்) 86 ரன்களும், பட்லர் 49 பந்துகளில் (9 பவுண்டரி, 3 சிக்ஸர்) 80 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர். 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வரும் 13ஆம் தேதி எதிர்கொள்கிறது.
உலகக் கோப்பை போட்டி தொடங்கும் முன் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்ட இந்திய அணி தற்போது அரையிறுதியில் ஒரு விக்கெட் கூட எடுக்க முடியாமல் இங்கிலாந்து அணியிடம் படுதோல்வி அடைந்திருப்பது ரசிகர்களை சோகத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. லீக் சுற்று போட்டியில் 4 வெற்றிகளை பெற்ற ஒரே அணி என்ற பெருமையுடன் அரையிறுதிக்கு வந்துள்ள இந்திய அணி இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்ததை ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்த தோல்வி குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் முன்னாள் வீரரும், முன்னாள் அணி தேர்வருமான சரண்தீப் சிங் கூறியதாவது, “அணியின் மிகப்பெரிய தவறுகளில் ஒன்று, முழு டி20 தொடரிலும் யுஸ்வேந்திர சாஹலை விளையாட வைக்காதது. குறிப்பாக இன்றைய (நேற்று) போட்டியில் ஆட வைக்காதது. இங்கிலாந்தின் மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர்கள் எவ்வளவு திறமையானவர்கள் என்பதை நீங்கள் பார்த்தீர்கள். லீக் கட்டத்தில் ரிஷப் பந்த் ஆடாமல் போனது (அவர் ஒரு ஆட்டத்தில் மட்டுமே விளையாடினார்) என்னை குழப்பிவிட்டது என்றார்.
மேலும் ஹர்திக் பாண்டியா அதிரடி காட்டினாலும் 6- 8 ஓவர்கள் முன்கூட்டியே அதிரடியை காட்டியிருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக இந்தியாவைப் பொறுத்தவரை, ராகுல் மற்றும் ரோஹித் பெரிய கேம்களில் ஃபார்மில் இல்லை, இவர்களால் விராட் மற்றும் சூர்யகுமார் மீது அழுத்தம் ஏற்படுகிறது. எதனை முறைதான் இவர்கள் இருவருமே ரன்கள் குவிப்பார்கள் என எதிர்பார்க்க முடியும் என்றார்..