2 மகள்களுடன் வாய்க்காலில் குதித்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள கரட்டுப்பாளையம் பகுதியில் தீபக்(45) என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூருவில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக தீபக் வீட்டில் இருந்த வேலை பார்த்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி(40) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு மது நிஷா(12), தருணிகா(6) என்ற மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் விஜயலட்சுமி தனது மகள்களை ஸ்கூட்டரில் அழைத்து கொண்டு சுட்டிக்கல் மேடு பகுதியில் இருக்கும் கீழ்பவானி வாய்க்காலுக்கு சென்றுள்ளார்.
அங்கு ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு விஜயலட்சுமி தனது மகள்களுடன் வாய்க்காலில் குதித்து விட்டார். முன்னதாக விஜயலட்சுமி தனது சகோதரர் ராமசாமிக்கு செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். அதில் எனக்கு வாழ பிடிக்கவில்லை. மகள்களை விட்டு செல்ல விருப்பமில்லை. என்னை மன்னித்து விடுங்கள் என அனுப்பியுள்ளார். இதனை அடுத்து உறவினர்கள் விஜயலட்சுமி மற்றும் குழந்தைகளை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். அப்போது ஸ்கூட்டர் வாய்க்காலுக்கு அருகே நிறுத்தப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் விஜயலட்சுமியின் உடலை மீட்டனர். இதனை அடுத்து வாய்க்காலில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் ஆயிபாளையம் பகுதியில் இருக்கும் மரக்கிளையில் தொங்கியபடி மதுநிஷா அழுது கொண்டிருந்தார். உடனடியாக அவரை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மேலும் தருணிகாவை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.