சேலம் மாவட்டத்தில் உள்ள தாதகாப்பட்டி பகுதியில் யுவராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மான்விழி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் தனியார் டைல்ஸ் நிறுவனத்தில் கூலி தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்துள்ளனர். இந்த தம்பதியினருக்கு 7 வயது உடைய நிதிஷா, 5 வயதுடைய அக்ஷரா என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக சர்க்கரை நோயால் அவதிப்பட்ட நிதிஷாவுக்கு தினமும் தம்பதியினர் இன்சுலின் ஊசி செலுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் 2-வது மகள் அக்ஷராவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் யுவராஜ் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்தார். அப்போது அக்ஷராவுக்கும் சர்க்கரை நோய் இருப்பது மருத்துவ அறிக்கையில் தெரியவந்தது.
தனது இரண்டு மகள்களுக்கும் சர்க்கரை நோய் வந்துவிட்டது என எண்ணி வாழ்க்கையில் விரக்தியடைந்த தம்பதியினர் 2 மகள்களுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தனர். அதன்படி யுவராஜ் ஒரு கடிதத்தை எழுதி வைத்துவிட்டு, மனைவி மகள்களுடன் மோட்டார் சைக்கிளில் மேட்டூர் அருகே கொளத்தூர் கர்நாடக – தமிழக எல்லையில் இருக்கும் சின்ன காவல் மாரியம்மன் காவிரி ஆற்றின் நீர்த்தேக்க பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு 2 மகள்களையும் காவிரி ஆற்றில் வீசிவிட்டு தம்பதியினர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.