பிரசித்தி பெற்ற கோவிலில் கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவி ஏற்றார். இந்த கட்சியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய நடிகை ரோஜா சித்தூர் மாவட்டம் நகரி தொகுதி எம்.எல்.ஏவாக பதவி ஏற்றார். இவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது அவருக்கு இடம் கிடைக்கவில்லை. அதன்பிறகு தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு வாரியத் தலைவர் என்ற பதவி ரோஜாவுக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் அந்தப் பதவி ரோஜாவுக்கு நீடிக்கவில்லை.
இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் கடந்த 10-ஆம் தேதி அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது. இதில் 14 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இதில் ரோஜாவுக்கு சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டது. அதன்பின் அமைச்சராக பதவி ஏற்ற ரோஜா மக்கள் நலப்பணிக்காக இனி சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொள்கிறேன் என கூறினார். தற்போது சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். இவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த அம்மனை தரிசித்ததால் 2 மடங்கு சக்தி கிடைத்துள்ளது என அமைச்சர் கூறியுள்ளார்.