ஒரு நாளில் இரண்டு மணி நேரத்திற்கு மேல் இணைய பயன்பாடு உள்ளதா, இணைய பயன்பாட்டினால் வேலை அல்லது படிப்பு பாதிப்பு அடைகிறதா, இணைய பயன்பாட்டை சுட்டிக்காட்டினால் எரிச்சலும் கோபமும் வருகிறதா, இணைய பயன்பாடு உங்கள் வாழ்க்கையில் மற்ற செயல்பாடுகளை குறைத்து இருக்கிறதா, இணைய பயன்பாட்டை குறைக்க நேரிட்டால் பதட்டம் ஏற்படுகிறதா இப்படி இருந்தால் மருத்துவரை உடனே அணுகி உளவியல் ஆலோசனை பெற வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்பிற்காக பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு செல்போன்களை கொடுத்து வந்தனர். அதில் குழந்தைகள் படிப்பை தவிர மற்ற விஷயங்களிலும் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கி, அதுவே தற்போது பிரச்சினையாக அமைந்துவிட்டது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவரும் தற்போது செல்போன் இல்லாமல் இருக்கவே முடியாது என்ற நிலைமைக்கு சென்று விட்டனர். ஒரு சிலர் மிகவும் அதிகமாக செல்போனுக்கு அடிமையாகிவிட்டனர். செல்போன் பயன்படுத்தக் கூடாது என்று கண்டித்தால் அவர்கள் தவறான முடிவுகளை மேற்கொள்கின்றனர். இதற்காகவே தமிழக அரசு இப்படி ஒரு உத்தரவை வெளியிட்டுள்ளது.