2 மணி நேரம் குடிநீர் வீணாக சென்றதால் வார்டு உறுப்பினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஈ.பி நகரில் வார்டு உறுப்பினரான குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில் இருந்து தினமும் சுமார் 2 மணிநேரம் குடிநீர் வீணாக போவதாக ஊராட்சி தலைவரிடம் புகார் அளித்துள்ளார். இதனால் கோபமடைந்த நீர்த்தேக்கத் தொட்டி ஆப்ரேட்டர் உதயமன் குமாரை கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ஊராட்சி தலைவரிடம் நடவடிகை எடுக்கக் கோரி மனு அளித்துள்ளார்.
ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிகையும் எடுக்காததால் கோபம் அடைந்த குமார் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் குமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து குமார் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.