கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், முக்கிய சாலை சந்திப்புகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பொருத்தப்படும் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் போலீசார் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கின்றனர். தற்போது பெரும்பாலான பகுதிகளில் இருக்கும் கேமராக்கள் பழுதடைந்து காணப்படுவதால் முக்கிய ஆதாரங்களை சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, கோவை மாநகரில் 5400 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கண்காணிப்பு கேமராக்களின் தேவை அதிகரித்திருப்பதால் முக்கிய சாலை சந்திப்புகள், அடுக்குமாடி குடியிருப்புகள், அனைத்து கடைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதை கட்டாயமாக செயல்படுத்த வேண்டும். இதற்கான நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டது. எனவே 2 மாதங்களுக்குள் மாநகரின் அனைத்து பகுதிகளிலும் கூடுதலான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என தெரிவித்துள்ளார்.