குடிநீர் சீராக விநியோகிக்கப்படாததை கண்டித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள வலையப்பட்டி கிராமத்தில் கடந்த இரண்டு மாதங்களாக குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படவில்லை. இதனை கண்டித்து கிராம மக்கள் உசிலம்பட்டி-பேரையூர் நெடுஞ்சாலையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அப்போது சீராக குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதி அளித்த பிறகு பெண்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.