டச்சு படையை வென்று கடற்கரையில் அமைக்கப்பட்ட வெற்றி தூணிற்கு ராணுவ வீரர்கள் வீரவணக்கம் செலுத்தியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல் என்ற துறைமுகம் அமைந்துள்ளது. இந்த துறைமுகத்தை டச்சு படையினர் கைப்பற்று நோக்கில் குளச்சல் கடல் பகுதியில் முகாமிட்டு தங்கி இருந்தனர். இதனை அறிந்த திருவிதாங்கூர் மகாராஜா மார்த்தாண்ட வர்மா வேணாட்டின் தலைநகரான கல்குளம் பகுதிக்கு வந்தனர். பின்னர் அங்கிருந்து தனது தளபதிகளுடன் குளச்சல் கடற்கரைக்கு சென்றார். இதனையடுத்து அவர் தனது படைகளுடன் சேர்ந்து 2 மாதங்களாக டச்சு படையினருடன் கடுமையான சண்டை போட்டு 1741 – ஆம் ஆண்டு ஜூலை 31-ஆம் தேதி டச்சு படையை வீழ்த்தி குளச்சல் கடற்கரையை வென்றார்.
இந்த வெற்றி நாளை நினைவூட்டும் வகையில் மகாராஜா மார்த்தாண்ட வர்மா கடற்கரையில் வெற்றி தூண் ஒன்றை நிறுவினார். இந்த வெற்றி தூணிற்கு மெட்ராஸ் படை பிரிவினர் கடந்த சில வருடங்களாக வீரவணக்கம் செலுத்தி வருகின்றனர்.இந்நிலையில் இன்று இந்த வெற்றி தூண்அமைத்து 281-ஆம் ஆண்டு நிறைவு பெற்றது. இதனை கொண்டாடும் விதமாக 11-ஆவது படைப்பிரிவு சார்பில் வெற்றி தூணிற்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் தேவாரம், வருவாய் அதிகாரி சிவப்பிரியா, முன்னாள் ராணுவத்தினர் நலத்துறை உதவி இயக்குனர் சீனிவாசன், போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கராமன், நகராட்சி ஆணையர் ஜீவா, விசைப்படகு சங்க நிர்வாகிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர், கவுன்சிலர் ஜெயந்தி, ஜான்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தியுள்ளனர்.