தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதுயடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அதிமுகவினரும், திமுகவினரும் ஒருவரையொருவர் குறைகூறிக்கொண்டு விமர்சனம் செய்து மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. ஒவ்வொரு கட்சியிலும் தொகுதி பங்கிடுவதில் இழுபறியும், கூட்டணி குறித்த குழப்பமும் நீட்டித்து வருகின்றது.
இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. வாக்காளர்களுக்கு ஓட்டிற்கு பணம் விநியோகிப்பதை தடுக்கவும், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கவும் பறக்கும் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சோதனைச்சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அந்த வழியாக கேரளாவில் முட்டை லோடு இறக்கிவிட்டு லாரி ஒன்று வந்துள்ளது.
அதை மடக்கி சோதனை செய்தபோது முட்டை லாரி ஓட்டுநரான ஆனந்தன் என்பவரிடமிருந்து உரிய ஆவணம் இல்லாமல் 8.98 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதே போன்று மேலும் ஒரு முட்டை லாரி ஓட்டுனரிடம் இருந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் 7 .40 லட்சம் ரூபாய் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த ரொக்க பணங்கள் பரமத்தி வேலூரில் உள்ள கருவூலத்தில் வழங்கப்பட்டுள்ளன.