தரமற்ற முறையில் உணவு தயாரித்த பிரபல கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள சாத்தமங்கலம்-ஆவின் சந்திப்பில் பிரபல பன் பரோட்டா கடை செயல்பட்டு வந்துள்ளது. இந்த கடையில் சுகாதாரமற்ற முறையில் உணவுகள் தயாரித்து விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ஜெயராம பாண்டியன் தலைமையிலான அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது தரமற்ற முறையில் உணவுகள் தயார் செய்யப்படுவதும், சாலை ஓரத்தில் இருக்கும் வாகனங்களிலிருந்து வரும் தூசிகளுடன் வாடிக்கையாளர்களுக்கு உணவு வழங்கப்படுவதும் தெரியவந்தது. இதனை அடுத்து அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி கடையை பூட்டி சீல் வைத்துள்ளனர். ஏற்கனவே அதிகாரிகள் இரண்டு முறை அந்த கடையை ஆய்வு செய்து கடைக்காரர்களை எச்சரித்து வந்தது குறிப்பிடத்தக்கதாகும்.