சிறுவன் ஒருவர் தனக்கு ஆபத்து காலத்தில் உதவிய தொண்டு நிறுவனங்களுக்கு நிதி திரட்டும் சம்பவம் பெருமையை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனில் டெவுன் பகுதியை சேர்ந்த சிறுவன் Zack Hine(7). இவர் அரியவகை கேன்சரால் இரண்டு முறை பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த 2012ஆம் வருடம் முதன் முதலில் கேன்சரால் பாதிக்கப்பட்ட அந்த சிறுவன் தொடர் சிகிச்சையின் மூலம் புற்றுநோயிலிருந்து குணமாகியுள்ளார். இதைத்தொடர்ந்து சாதாரண நிலைக்கு திரும்பிய சிறுவன் அடுத்த நான்கு வருடங்களில் உடனடியாக எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
அதன் பின்னர் இந்த அறுவை சிகிச்சையால் ஏற்பட்ட பாதிப்புகளால் தற்போது மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து சிறுவனுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருப்பதால் கொரோனா பாதிக்க வாய்ப்பிருக்கிறது என்ற அச்சத்தில் அவருடைய பெற்றோர் பள்ளிக்கு அனுப்பவில்லை.
இந்நிலையில் நெருக்கடியான இந்த சூழ்நிலையில் தனக்கு உதவிய தொண்டு நிறுவனங்கள் நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதை சிறுவன் அறிந்துள்ளார். இதையடுத்து ஆபத்து கட்டத்தில் தனக்கு உதவிய தொண்டு நிறுவனங்களுக்கு நிதி திரட்டும் முயற்சியில் களம் இறங்கியுள்ளார். அதன் ஒரு பகுதியாக சிறுவன் 77 மைல்கள் நடக்க முடிவு செய்துள்ளார். தங்களது மகனின் இந்த முடிவு தங்களுக்கு அதிர்ச்சியும், வியப்பும் அளித்துள்ளதாகவும், தினமும் நடக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளது தங்களுக்கு பெருமை அளிக்கிறது என்றும் சிறுவனின்பெற்றோர் தெரிவித்துள்ளனர்.