நாற்காலியில் இருந்து தவறி கீழே விழுந்து ஒரு வயது குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஜக்காம்பெட்டை கிராமத்தில் வள்ளி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு மனோகர் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு ஒரு வயதுடைய யுவராஜ் என்ற ஆண் குழந்தை இருந்துள்ளது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு மனோகர் இறந்துவிட்டார். அதன் பிறகு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சம்பத் குமார் என்பவரை வள்ளி இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை வள்ளி வேலைக்கு சென்ற பிறகு சம்பத்குமாரும், குழந்தையும் வீட்டில் இருந்துள்ளனர்.
அப்போது குழந்தை நாற்காலி மீது ஏறி நின்று பிரிட்ஜில் இருந்த பொருட்களை எடுக்க முயற்சி செய்துள்ளான். அப்போது எதிர்பாராதவிதமாக நாற்காலியில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த யுவராஜை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே யுவராஜ் பரிதாபமாக இறந்தான். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.