Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

2-வது முறையாக ஊரை காலி செய்த பொதுமக்கள்….. என்ன காரணம்…? அரசு புறம்போக்கு நிலத்தில் குடியேறியதால் பரபரப்பு….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொராட்டகிரி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர். இங்கு இயங்கி வரும் 6 கல் குவாரிகளில் இருந்து எம்.சாண்ட் மணல், ஜல்லி கற்களை டிப்பர் லாரியில் ஏற்றி செல்வதால் சாலைகள் பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் கல்குவாரிகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் மனு அளித்து, பல்வேறு கட்டமாக போராட்டம் நடத்தியும் எந்த தீர்வும் எட்டப்படவில்லை. இதனால் கோபமடைந்த கிராம மக்கள் கடந்த 2- ஆம் தேதி ஊரை விட்டு வெளியேறி ஓசூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் குடியேற சென்றனர்.

அவர்களை வருவாய்த்துறையினரும், போலீசாரும் தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். ஆனால் கிராமத்தின் வழியாக மீண்டும் லாரிகளில் எம்.சாண்ட் மணலை ஏற்றி சென்றதால் நேற்று 2-வது முறையாக கிராம மக்கள் ஆடு, மாடுகளை ஓட்டிக்கொண்டு, குழந்தைகளுடன் மழையில் நனைந்தபடி மூட்டை, முடிச்சுகளுடன் ஊரை காலி செய்தனர். இதனையடுத்து கிராம மக்கள் அரசு புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைத்து குடியேறினர்.

இதுகுறித்து அறிந்த தேன்கனிகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி தலைமையிலான போலீசார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கல்குவாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், கிராமத்தின் வழியாக லாரிகள் செல்வதை தடுத்து நிறுத்தினால் இந்த இடத்தை காலி செய்வோம் என பொதுமக்கள் கூறியுள்ளனர். இதனால் லாரிகள் கிராமத்தின் வழியாக செல்வது தடுத்து நிறுத்தப்பட்டது. மேலும் பாதுகாப்பாக ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் அங்கு நிறுத்தப்பட்டன. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |