பேருந்து நிலையத்தில் விட்டு சென்ற தாயிடம் 2 வயது பெண் குழந்தை ஒப்படைக்கப்பட்டது.
தர்மபுரி பேருந்து நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பெண் 2 வயது குழந்தையை விட்டு சென்றுள்ளார். அந்த குழந்தை தனியாக அழுது கொண்டிருந்ததை போலீசார் பார்த்தனர். பின்னர் போலீசார் தர்மபுரி அரசு மருத்துவமனையில் இருக்கும் காப்பகத்தில் குழந்தையை ஒப்படைத்தனர். இந்நிலையில் பேருந்து நிலையத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இதற்கிடையில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற பெண் மீட்கப்பட்ட குழந்தைக்கு தாய் என கூறி தர்மபுரி டவுன் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்.
இதனை அடுத்து ராஜேஸ்வரி கொண்டு வந்த குழந்தையின் பிறப்பு சான்றிதழ், பிறந்த இடம் உள்ளிட்ட ஆவணங்களை போலீசார் சரிபார்த்து குழந்தை ராஜேஸ்வரியுடையது என்பதை உறுதி செய்தனர். இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் குடும்ப தகராறு காரணமாக ராஜேஸ்வரி குழந்தையை பேருந்து நிலையத்தில் விட்டு சென்றது தெரியவந்தது. பின்னர் அறிவுரை கூறி குழந்தையை ராஜேஸ்வரியுடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.