ஆண்டிபட்டி அருகே அபார ஞாபக சக்தியால் இந்திய சாதனையாளர் புத்தகத்தில் இடம்பிடித்த 2 வயது சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ஜீவன் மாணிக்கம் மற்றும் திவ்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு இரண்டு வயதில் ரினேஷ் ஆதித்யா என்ற மகன் இருக்கிறான். ஜீவன் மாணிக்கம் கத்தார் நாட்டின் விமான நிலையத்தில் வேலை செய்து வருகின்றார். அதனால் திவ்யா மற்றும் ஆதித்யா ஆகியோர் ஆண்டிபட்டியில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் தங்களின் மகன் ஆதித்யா அபார ஞாபகசக்தி உடையவன் என்று சிறுவனின் பெற்றோர் அறிந்தனர். அதனால் தேசியக் கொடிகளின் மூலம் நாடுகளின் பெயர்களை கூறுதல், இந்திய நாட்டின் தற்போதைய மத்திய மந்திரிகளின் பெயர்கள், உலக நாடுகளின் பிரசித்தி பெற்ற விமானங்களின் பெயர்கள், பல்வேறு நாடுகளின் அதிபர்கள், பிரதமர்களின் பெயர்கள், லோகோ மூலமாக பிரபல நிறுவனங்களின் பெயர்களை கூறுதல் தொடர்பாக அவனுக்கு பெற்றோர் பயிற்சி அளித்து வந்துள்ளனர்.
இதனையடுத்து தன் பெற்றோர் சொல்லிக் கொடுத்ததை அப்படியே உள்வாங்கிக் கொண்ட சிறுவன் ஆதித்யா, தான் கற்றதை அபாரமாக வெளிப்படுத்தி சாதனை படைத்துள்ளான். சிறுவன் தேசியக்கொடியை காட்டினால் அந்த நாட்டை உலக வரைபடத்தில் காட்டி வியக்க வைக்கிறான். அதுமட்டுமன்றி பல நிறுவனங்களின் லோகோவை சரியாக கூறுகிறான். அந்த சிறுவனின் திறமையால் இந்திய சாதனையாளர்கள் புத்தகத்தில் சிறுவனின் பெயர் இடம் பெற்றுள்ளது. அதுமட்டுமன்றி கலாம் விஷன் இந்தியா 2020 சான்றிதழை சிறுவன் பெற்றுள்ளான். இத்தகைய சாதனையை படைத்த சிறுவனை தேனி மாவட்ட ஆட்சியர் நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கியுள்ளார்.