நாகையில் குடிநீர் வழங்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டத்தில் உள்ள காடம்பாடி மாரியம்மன் கோவில் தெரு, என்.ஜி.ஓ. காலனி ஆகிய பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். கடந்த இரண்டு வருடங்களாக இந்த பகுதிகளில் வசித்து வரும் மக்களுக்கு குடிநீர் வினியோகம் சரிவர கிடைக்கவில்லை. இதுகுறித்து கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் கோபமடைந்த மாரியம்மன் கோவில் தெரு, என்.ஜி.ஓ காலனி ஆகிய பகுதிகளில் வசித்து வரும் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் நகராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் சென்று முற்றுகையிட்டனர்.
அங்கு உடனடியாக தடையின்றி குடிநீர் வழங்க கோரியும், குடிநீர் வழங்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெளிப்பாளையம் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் குடிநீர் வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக நகராட்சி அலுவலர்கள் வாக்குறுதி அளித்தனர். அதன்பின் போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.