திடீரென பற்றிய தீயில் கரும்பு வயல் எரிந்து நாசமானதால் விவசாயி வேதனை அடைந்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிங்கராயன் கட்டளை கிராமத்தில் சின்னமணி என்பவர் தனக்குரிய நிலத்தில் கரும்பு பயிரிட்டுள்ளார். இந்நிலையில் நேற்று மாலை திடீரென கரும்பு தோட்டத்தில் தீ பற்றி எரிய தொடங்கியுள்ளது. அந்த சமயத்தில் காற்று வீசியதால் தீ வேகமாக பரவியுள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இருப்பினும் 2 ஏக்கரில் கரும்பு தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. இந்த தீ ஏற்படுவதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் கூறும்போது கரும்பு வயலுக்கு மேலே சென்ற மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசியதால் தீப்பொறி விழுந்து கரும்பு பயிரில் தீப்பற்றி இருக்கலாம் என கூறுகின்றனர்.