திருப்பூர் மாவட்டத்திலுள்ள பி.என்.ரோடு புதிய பேருந்து நிலையம் அருகில் பெருமாநல்லூர்-திருப்பூர் சாலையில் சரக்கு ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்த மற்றொரு ஆட்டோ முன்னால் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதில் 2 ஆட்டோக்களும் ஒன்றோடொன்று சிக்கிக் கொண்டன. இதனால் நடுரோட்டில் நீண்ட நேரமாக 2 ஆட்டோக்களும் நின்று கொண்டிருந்தது. இந்நிலையில் டிரைவர்கள் ஆட்டோவை எடுக்க முயற்சி செய்தும் அதை எடுக்க முடியவில்லை.
இதன் காரணமாக பிச்சம்பாளையம்புதூர் முதல் புதிய பேருந்து நிலையம் வரை 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் அந்த சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு நடுரோட்டில் இருந்து 2 ஆட்டோக்களும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டன. அதன்பின் அந்த சாலையில் போக்குவரத்து சீரானது.