பெற்றெடுத்த 2 குழந்தைகளையும் குளத்தினுள் பறிகொடுத்துவிட்டு பெற்றோர்கள் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் நெமிலி பகுதியை அடுத்த மேலூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி. இவர் நெமிலியில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அமுலு. இவர்கள் இருவருக்கும் ஹரிணி என்ற 4 வயது பெண் குழந்தையும், தர்ஷன் என்ற 2 வயது ஆண் குழந்தையும் இருந்தனர். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார் அமுலு.
அப்பொழுது வீட்டு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள், பின் அருகாமையில் உள்ள குளத்திற்கு விளையாட சென்றுள்ளனர். அப்போது திடீரென கால் தவறி குளத்தினுள் அவர்கள் இருவரும் விழ, அப்பகுதியில் ஆள் நடமாட்டம் ஏதும் இல்லாததால் சிறுவர்களை காப்பாற்றவும் ஆள் இல்லை. இதனால் மூச்சுத் திணறி இரண்டு பேரும் நீரின் உள்ளே பரிதாபமாக மூழ்கி உயிரிழந்தனர்.
நீண்ட நேரத்திற்குப் பின் குழந்தைகளை காணாமல் பெற்றோர்கள் தேட அருகில் இருந்த குளத்திற்கு சென்று பார்த்த பொழுது இருவரும் இறந்த நிலையில் மிதந்த கிடந்தனர். இதை பார்த்தவுடன் அவர்கள் இருவரையும் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அவர்கள் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்று வளர்த்த இரண்டு குழந்தைகளையும் பறிகொடுத்துவிட்டு பெற்றோர்கள் கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.