ஆற்றில் குளித்து கொண்டிருக்கும் போது தண்ணீரில் மூழ்கி 2 சிறுவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள கைலாயபுரம் இருளர் காலனியில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாதேஷ் என்ற மகன் இருந்துள்ளார். அதே பகுதியில் இவர்களது உறவினர்களான காளியப்பன் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவருக்கு வெற்றிவேல் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சிறுவர்களான மாதேஷும் வெற்றிவேலும் இணைந்து அப்பகுதியில் வசிக்கும் காளியப்பன் என்ற முதியவருடன் சடையம்பட்டி செல்லும் வழியில் அமைந்துள்ள வாணி ஆற்று பகுதிக்கு கால்நடைகள் மேய்க்க சென்றுள்ளனர்.
இதனை அடுத்து ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென இரண்டு சிறுவர்களும் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீச்சல் தெரியாத இருவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த வெற்றிவேல் மற்றும் மாதேஷ் ஆகிய இரண்டு சிறுவர்களின் உடல்களை மீட்டனர். அதன் பின் சிறுவர்களின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.