அண்ணனும் தம்பியும் பெற்றோர் இல்லாத காரணத்தால் குளிக்கச் சென்ற இடத்தில் எதிர்பாரா விதமாக உயிரிழந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கொடுங்கால் கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அஸ்வின் குமார் மற்றும் தினேஷ்குமார் என இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் அதே பகுதியில் அமைந்திருக்கும் பள்ளிக்கூடத்தில் படித்து வருகின்றனர். இந்நிலையில் ராஜேந்திரன் அவரது மனைவியுடன் உறவினரின் வீட்டில் நடைபெற்றுக்கொண்டிருந்த வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து 2 மகன்களும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். அதன்பின் மாலை நேரத்தில் வீடு திரும்பிய ராஜேந்திரனும் அவரது மனைவியும் இரு மகன்களையும் காணவில்லை என்பதினால் அக்கம்பக்கத்தில் தேடியுள்ளனர்.
அப்போது அதே பகுதியில் அமைந்திருக்கும் குளத்தில் அஸ்வின்குமார் மற்றும் தினேஷ் குமார் ஆகிய இருவரும் பிணமாக மிதந்ததை பார்த்து பெற்றோர் கதறி அழுதுள்ளனர். பின்னர் இது பற்றி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் பேரில் விரைந்து சென்ற காவல்துறையினர் அருகில் இருப்பவர்களிடம் விசாரணை செய்த போது அண்ணன் மற்றும் தம்பி இருவரும் குளத்தில் குளிக்க சென்ற நிலையில் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து இருப்பதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.