சீனாவால் உளவாளிகள் என சிறை பிடிக்கப்பட்ட கனடாவை சேர்ந்த இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவை சேர்ந்த தொழிலதிபரான மைக்கேல் ஸ்பேவர் மற்றும் அந்நாட்டின் தூதரக அலுவலரான மைக்கேல் கோவ்ரிக் இருவரையும் கடந்த 2018ஆம் ஆண்டு சீனா உளவாளியென கூறி சிறையில் அடைத்தது. தற்போது இருவரும் விடுதலை செய்யப்பட்டதாக கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.
குறிப்பாக கடந்த 2018 டிசம்பர் 1ஆம் தேதியன்று அமெரிக்காவின் கோரிக்கை ஏற்று வான்கூவர் என்னும் பகுதியில் கனடா அதிகாரிகள் சீன நிறுவனமான ஹூவாய் தொழில்நுட்பத்தின் தலைமை அதிகாரி மெங் வான்சோவை கைது செய்தனர். இதனை தொடர்ந்து கனடாவை பழிவாங்க ஸ்பேவர் மற்றும் கோவ்ரிக்கை உளவாளிகள் என்று பொய்யான குற்றம் சுமத்தி சீனா அவர்களை கைது செய்தது.
ஆனாலும், பழிக்குப்பழி வாங்கியதை சீனா ஒப்புக்கொள்ளவில்லை. தற்போது மெங் மீதுள்ள வழக்கு திரும்ப பெறப்பட்டு நேற்றிரவு 7.30 மணியளவில் வான்கூவர் விமான நிலையத்திலிருந்து அவர் சீனாவுக்கு புறப்பட்டுள்ளார். மேலும் மெங் விடுவிக்கப்பட்ட அதே நேரத்தில் கனடாவை சேர்ந்த இருவரும் விடுதலை அடைந்து வீடு திரும்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் சீனா பழிவாங்கவில்லை என்று கூறியது பொய் என்றும் தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் அமெரிக்க அதிபருக்கு தொடர்புள்ளதாக கூறப்படுகிறது.