கடலூர் அருகே விபத்தில் சிக்கிய 2 கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பகுதியைக் அடுத்த இருப்புகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் மரிய வின்சன்ட். இவர் சேப்பிளநத்தத்தில் உள்ள விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்துள்ளார்.
இவரும் இவரது நண்பரான அமல்ராஜ் என்பவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் விருதாச்சலம் நோக்கி சென்று கொண்டு இருந்தனர். அப்போது புதுப்பட்டி பகுதி அருகே சென்ற சமயத்தில் இவர்கள் மோட்டார் சைக்கிள் பின்னால் வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து இவர்கள் மீது மோதியதில் நிலைதடுமாறிய இவர்கள் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், மயக்க நிலையில் இருந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி விட்டனர்.
ஆனால் அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இருவரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின் விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.