மாவட்டம் முழுவதும் உள்ள காவல்துறை உயர் அதிகாரிக்கு டிஜிபி ஜேகே திரிபாதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
தமிழகத்தில் நாளை முதல் மதுக்கடைகளை திறக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது . பிறமாநிலங்களுக்கு சென்று அதிகமானோர் மது வாங்கி வரும் நிலையில் தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அரசு விளக்கம் அளித்திருந்தது. மேலும் பல கட்டுப்பாடுகளும் விதித்தது. இதில், தடை செய்யாத பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கலாம். மதுக்கடைகளில் ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது. ஒருவருக்கும் மற்றொருவருக்கு 6 அடி தூரம் இடம் இருக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்த்துள்ளது.
கூடுதல் பணியாளர்களை பணியில் ஈடுபட செய்து கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். கட்டுப்பாடு உள்ள பகுதிகளில் திறக்க கூடாது. அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் தேவைக்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும். பார்கள் திறக்க அனுமதியில்லை என்றும் கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவு பிறப்பித்தது. இதற்க்கு தமிழக அரசியல் கட்சிகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் மதுக்கடைகளில் அதிகமான கூட்டம் ஏற்படுவதை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக டிஜிபி ஜேகே திரிபாதி சென்னை தவிர மற்ற மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் அனைத்து மதுக்கடைகளும் 2 போலீசார் பாதுகாப்பு பணியில் இருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். ஊர்க்காவல் படையை சேர்ந்தவர்களும், சமூக ஆர்வலர்களும் இருவர் பணியில் ஈடுபடவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.