பிரிட்டனில் அடைக்கப்பட்டிருந்த குடியிருப்பினுள், இரண்டு சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்திலுள்ள லங்காஷைர் பகுதியிலிருக்கும் Higher Walton என்னும் கிராமத்தின் Cann Bridge வீதியிலிருந்து, நேற்று மதியம் சுமார் 1:40 மணிக்கு காவல்துறையினருக்கு அழைப்பு வந்திருக்கிறது. அதில், அப்பகுதியில் இருக்கும் ஒரு குடியிருப்பில் வசித்த இரண்டு நபர்களுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டிருக்கும் என்று சந்தேகிப்பதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.
எனவே, சம்பவயிடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், அந்த குடியிருப்பின் கதவை தட்டி பார்த்தனர். உள்ளிருந்து, எந்த சத்தமும் வராததால், சந்தேகமடைந்த காவல்துறையினர் குடியிருப்பின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு ஒரு ஆணும், பெண்ணும் இறந்துகிடந்தனர்.
உடல்களை கைப்பற்றிய காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். சம்பவம் நடந்த சில மணி நேரங்களுக்குப் பின், இது தொடர்பில் 35 வயது நபரை கைது செய்திருப்பதாகவும், அவரை காவலில் வைத்திருப்பதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர். மேலும் இந்த வழக்கு தொடர்பில் விசாரணை நடத்த துப்பறியும் குழுவை நியமித்திருக்கிறார்கள். தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அப்பகுதியில் காவல்துறையினர் சோதனை பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.