தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால்,இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதுமட்டுமன்றி நேற்று முன்தினம் முதல் பல புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு ஏற்கனவே இருந்த ஊரடங்கை விட மேலும் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.
மேலும் கொரோனா தடுப்பு பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களின் பணி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அவர்கள் மட்டுமல்லாமல் முன் களப் பணியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என அனைத்துத் தரப்பினரும் கொரோனா களப்பணியில் மிகச் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். மேலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் DRDO உருவாக்கியிருக்கும் 2- DG என்ற மருந்து கொரோனா நோயாளிகளை குணப்படுத்த உதவுகிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே அந்த மருந்தை தமிழ்நாட்டில் பயன்படுத்த மாண்புமிகு அமைச்சர் திரு மா.சுப்பிரமணியன் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்று விசிக எம்.பி. ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.