தனது 2 குழந்தைகளையும் கொன்றுவிட்டு தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மங்கலபட்டி பகுதியில் பெருமாள் மகன் முருகன் வசித்து வந்தார். இவர் சேலம் மாவட்டத்திலுள்ள குப்பனூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் தாபா உணவு விடுதியில் சமையலராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு முருகேஸ்வரி என்ற மனைவியும், சீனிவாசன், கிருஷ்ணபிரியா என்ற மகனும்- மகளும் இருக்கின்றனர். கடந்த 24-ஆம் தேதி கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த முருகன் மனைவியின் செல்போனை எடுத்துக்கொண்டு இரு குழந்தைகளையும் மொபட்டில் அழைத்து சென்ற நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவரது மனைவி செல்போனில் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் என வந்தது. இதுகுறித்து முருகேஸ்வரி கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு திருமண மண்டபத்திற்கு பின்புறம் உள்ள மாந்தோப்பில் முருகன் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தார். அவரது அருகில் 2 குழந்தைகளும் இறந்து கிடந்தனர். இதனை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 பேரின் சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் உருக்கமான தகவல்கள் கிடைத்துள்ளது. அதாவது மனைவியின் நடத்தையில் முருகன் சந்தேகப்பட்டு அடிக்கடி அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன் முருகன் விஷம் குடித்து விட்டதாகவும் மற்றும் 2 குழந்தைகளையும் தற்கொலை செய்ய சொல்லி மிரட்டியதாக தெரிகிறது.
இந்நிலையில் தான் அவர் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு முருகனும் தூக்கிட்டு தற்கொலை செய்தது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இவ்வாறு முருகன் இறப்பதற்கு முன்பு உறவினர்களுக்கு அனுப்பிய வீடியோவில் “இதற்கு தானே நீங்கள் ஆசைப்பட்டீங்க நினைத்த மாதிரி எங்கள கொன்னுடீங்க நல்ல பார்த்துக் கொள்ளுங்கள் என பேசியுள்ளார். அந்த வீடியோ பதிவினை காவல்துறையினர் கைப்பற்றி யாராவது அவர்களை தற்கொலைக்கு தூண்டினார்களா அல்லது கொலை செய்தார்களா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக முருகேஸ்வரி மற்றும் அவரது உறவினர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.