கொடைக்கானலில் 100க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை திருடிய 2 வாலிபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான கொடைக்கானலில் 50க்கும் மேற்பட்ட தனியார் மதுபானகடைகள் செயல்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் ஊரடங்கு உத்தரவால் தற்போது மூடப்பட்டு உள்ளது. இதனால் கொடைக்கானலில் உள்ள குடிமகன்கள் மது கிடைக்காமல் திணறி வருகின்றனர். இப்படி இருக்கையில் மது பாட்டிலை அப்சர்வேட்டரி பகுதியில் உள்ள தனியார் மதுபான கடையின் கண்ணாடி ஜன்னலை உடைத்து மர்ம நபர்கள் 100க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து கடையின் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதன்படி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சமயத்தில் மது போதையுடன் வந்த 2 வாலிபர்களை பிடித்து உங்களுக்கு மது எப்படி கிடைத்தது என்று விசாரிக்கையில், மதுவை திருடியதே நாங்கள்தான் என்று அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
பின் மேற்கொண்ட விசாரணையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 45 மதுபாட்டில்கள் மீட்கப்பட்டது. மற்ற பாட்டில்கள் நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் விற்பனை செய்யப்பட்டதாக அவர்கள் குடிபோதையில் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்களை சிறையில் அடைத்த அதிகாரிகள் அவரது கூட்டாளி ஒருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.