ரியல் எஸ்டேட் அதிபரை இரும்பு கம்பியால் 2 வாலிபர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூலூர் பகுதியில் லட்சுமப்பா என்ற ரியல் எஸ்டேட் அதிபர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர் தனக்கு நிலம் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு லட்சுமப்பா முகளை பள்ளியில் இருக்கும் எல்லம்மா கோவில் அருகே வருமாறு அந்த மர்மநபரிடம் கூறியுள்ளார். இந்நிலையில் லட்சுமப்பா தான் கூறியிருந்த எல்லம்மா கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது 2 வாலிபர்கள் திடீரென அவரை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதனையடுத்து படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரியல் எஸ்டேட் அதிபரை தாக்கிவிட்டு தப்பி ஓடிய 2 வாலிபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.