இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்ட விபத்தில் 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சீக்கராஜபுரம் பகுதியில் மணிகண்டன் மற்றும் சரவணன் என்ற 2 நபர்கள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் இரவு நேரத்தில் சீக்கராஜபுரத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் திருவலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது திருவலம் சாலையில் இருந்து ஐயப்பன் என்பவர் சீக்கராஜபுரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் திருவலம் பேருந்து நிலையம் அருகில் சென்று கொண்டிருக்கும் போது இரண்டு மோட்டார் சைக்கிள்களும் ஒன்றுக்கொன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மணிகண்டன் மற்றும் சரவணன் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனைப் பார்த்த அருகிலுள்ளவர்கள் பலத்த காயமடைந்த மணிகண்டன் மற்றும் சரவணன் ஆகிய இருவரையும் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சரவணன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் மணிகண்டனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த ஐயப்பன் என்பவர் பலத்த காயமடைந்து ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இதுகுறித்து காட்பாடி மற்றும் திருவலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.